Thursday 18 June 2015

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்... தமிழக அரசு தகவல்

சென்னை: தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த தனியாக சட்டம் கொண்டு வரக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளிக்கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: அனைத்து தனியார் பள்ளிகளையும் கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர உள்ளோம். புதிய சட்டம் கொண்டு வருவது தொடர்பாக உயர் மட்டக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆர்.வேலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 1974ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி புதிதாக தொடங்கப்படும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கமுடியாது. 1976ம் ஆண்டு சென்னையில் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்தி வந்த 36 மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழக சிண்டிகேட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்த தீர்மானத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அதிகாரம் வழங்கி இந்த 36 பள்ளிகளையும் ஒழுங்குபடுத்துவதற்காக புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டது. இந்த விதிமுறையை பயன்படுத்தி 1976ம் ஆண்டு முதல் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சுமார் 1500 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இது 1974ல் கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டத்துக்கு எதிரானது. எனவே 1976ல் கொண்டு வரப்பட்ட விதிமுறையை பின்பற்றி வழங்கப்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை தனியார் பள்ளிகளுக்கு புதிதாக அங்கீகாரம் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

Share

& Comment

 

Copyright © 2015 Tamil Engine™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.