Thursday 18 June 2015

வெப்சைட் என்ற பெயர் வந்தது எப்படி?

இன்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்குத்தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியும்?

வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயற்கையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது, தனிப்பட்ட பக்கங்களை எப்படி குறிக்கலாம் என விவாதிக்கப்பட்டது. அப்போது டிம் பெர்னர்ஸ் லீ (வலையை உருவாக்கியவர்) ஒரு நூதனமான யோசனையை முன் வைத்திருக்கிறார். இப்போது வெப்சைட் என்று அறியப்படும் தளங்களை அவர் "சைக்கோ ஹிஸ்டரி" என்று குறிப்பிட விரும்பியிருக்கிறார். வலைக்கும் உளவியலுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த பெயரை அவர் பரிந்துரைத்தார்?

லீயின் இந்த விருப்பத்திற்கு காரணம் அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோ மீது அவருக்கு இருந்த ஆர்வம்தான். எதிர்காலவியல் சார்ந்த கதைகளுக்காக அறியப்படும் அசிமோ பவுண்டேஷன் கதை வரிசையில், வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி தொலைநோக்கிலான கற்பனையால் விவரித்திருப்பார். அதில் வரும் பேராசிரியர் ஹாரி செல்டன், வரலாறு, சமூகவியல் மற்றும் கணிதத்தை கலந்து மக்களின் பழக்க வழக்கங்களை கணிக்கும் முறையை உருவாக்கியிருப்பார். இதைத்தான் சைக்கோ ஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருப்பார்.

லீயும் இதே பெயரை வைக்க விரும்பினார். ஆனால், அவருடன் சேர்ந்து விவாதித்தவர்கள் வெப்சைட் என்ற பெயரையே வலியுறுத்தியிருக்கின்றனர். லீயும் அதை ஏற்றுக்கொள்ளவே, வெப்சைட் என்ற பெயர் இணையதளங்களுக்கு சூட்டப்பட்டது.

வலை என்னவாக உருவாகப்போகிறது என தெரியாத காலகட்டத்தில், இணைப்புகளை கொண்டிருக்கும் பக்கங்களுக்கு, டிம் பெர்னர்ஸ் லீ சைக்கோஹிஸ்டரி என பெயர் சூட்ட நினைத்ததை இன்று திரும்பி பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கும்.

வெப்சைட் பெயர் சூட்டப்பட்ட விதம் பற்றிய இந்த சுவாரஸ்யமான பிளேஷ்பேக்கை, லீயின் சகாக்களில் ஒருவரான பிரிட்டன் பேராசிரியர் வெண்டி ஹால் சிநெட்.காம் இணைதளத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் ஹால், பிரிட்டனில் தொழில்நுடப்துறையில் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக கருதப்படுபவர். 2006ஆம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீயுடன் இணைந்து இவர் வெப் சயின்ஸ் டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.

வெப்சைட்டை வேறு பெயரில் யோசித்து பார்ப்பதே கூட அந்நியமாக தோன்றும் அளவுக்கு இந்த பெயரும் அதன் கருத்தாக்கமும் நமக்கு நெருக்கமாகிவிட்டது. மாறாக இணையதளங்களை சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்!

Share

& Comment

 

Copyright © 2015 Tamil Engine™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.