Thursday 18 June 2015

அமெரிக்காவில் பயங்கரம்... கருப்பினத்தவர்கள் சர்ச்சில் சரமாரி துப்பாக்கிச் சூடு

சார்ல்ஸ்டன்: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள பிரபல கருப்பினத்தவர்கள் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியாகியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ல்ஸ்டன் நகரில் இமானுவல் ஆப்பிரிக்க மெதடிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயம் உள்ளது. மாநிலத்தின் பழமையான மற்றும் புகழ் பெற்ற கருப்பினதவர் தேவாலயம் அது. 19வது நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தில் புதன்கிழமை மாலை பிரார்த்தனை கூட்டம் நடந்துள்ளது.


அப்போது இரவு 9 மணி அளவில் நீல நிற ஜீன்ஸ், ஷூ, சாம்பல் நிற டிசர்ட் அணிந்த 20களில் உள்ள வெள்ளை நிறத்து இளைஞர் ஒருவர் தேவாலயத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபர் ஒருவரை அழைத்துச் சென்றனர். அந்த வாலிபரும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் போன்று உடை அணிந்திருந்தார். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தப்பியோடிவிட்டதாகவும் அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சார்ல்ஸ்டன் மேயர் ஜோ ரிலீ கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் நடந்த இந்த சம்பவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது, மனதை உருக்குவது ஆகும் என்றார்.

Share

& Comment

 

Copyright © 2015 Tamil Engine™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.