Thursday 18 June 2015

2022-க்குள் அனைவருக்கும் வீடு திட்டம். மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: வீட்டு கடனுக்கான வட்டி மானியம் அதிகரிக்கப்படுவதுடன், நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில், "2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு" என்ற திட்டத்தை தொடங்குவதற்கான அனுமதியும், அந்தத் திட்டத்துக்கான செலவினத் தொகைகளுக்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டன. அனைவருக்கும் வீடு திட்டத்தின் இலக்கை எட்டும் வகையில், நகர்ப்புறத்தில் வாழும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வீட்டுவசதிக் கடன்களுக்காக மத்திய அரசு வழங்கும் மானிய உதவித்தொகை 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஒரு பயனாளிக்கு, திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையில் ரூபாய் 2.30 லட்சம் வரை சுமை குறையும். மத்திய அரசின் இந்த மானிய உதவித்தொகையானது, தேசிய நகர்ப்புற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு துணைத் திட்டங்களின் மூலமாக பயனாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 4 வகைப்பாடுகளில் தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீட்டுவசதிக் கடன்களுக்கு மத்திய அரசு ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து ரூபாய் 2.30 லட்சம் வரை மானியம் வழங்கும்.

இந்த மானியங்கள் நிகழாண்டு முதலாக ஒவ்வொரு கட்டமாக பயனாளிகளுக்கு சேரும் வகையில் நெறிப்படுத்தப்படும். இந்தச் சலுகைகள் மூலம் அடுத்த 7 ஆண்டுகளில் அதாவது 2022க்குள் நாடு முழுவதும் புதிதாக 2 கோடி வீடுகள் கட்டப்படும். நாடு முழுவதும் 4,041 மாநகரங்களிலும், நகரங்களிலும் நகர்ப்புற வீடுகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. முதல்கட்டமாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 500 நகரங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share

& Comment

 

Copyright © 2015 Tamil Engine™ is a registered trademark.

| Blogger Templates Designed by Templateism. Hosted on Blogger Platform.